↓Skip to main content

Eternity, the perennial dream of humanity

Writing
Photograph: Neeraj Bharadwaaj

முன்குறிப்பு:
#

நான் படிக்கும் கல்லூரியின் (MSSW, எழும்பூர், சென்னை) பவழ விழாக் கொண்டாட்டத்திற்காக, அதன் நிறுவரைப் பற்றி நான் எழுதிய நாடகம் இது. ஆனால், சில காரணங்களால் எங்களால் இதை நாடமாக்கி அரங்கேற்ற முடியவில்லை. ஆகையால், அதன் உள்ளடக்கங்களை சற்றே மாற்றி இங்கே இதை கட்டுரையாய் வெளியிடுகிறேன். இதிலே நான் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்களை நான் வெறும் வசனங்களாய் இல்லாமல், காட்சிகளாகவும் கற்பனை செய்திருந்தேன். அசையும் ஓவியங்களைப் போல், வேடந்தரித்த மனிதர்கள் மேடையில் நின்று, சின்னச் சின்ன அசைவுகளை திரும்பத் திரும்பச் செய்யும்போது பின்னணியில் ஒலிக்கும் ஒரு தனியுரை (monologue) போலவே இதை வடிவமைத்திருந்தேன். நாடகம் என்பதைவிட நிகழ்த்தப்படும் தனியுரை (enacted monologue) என்று இதை அழைப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆனால், கட்டுரை என்றான பிறகு காட்சிகளை இங்கே பகிரவியலாது. இந்தக் கற்பனையில் எந்த அளவிற்கு காட்சிகளுக்கு ஒரு பங்கு இருக்கிறதோ அதைவிடப் பெரிய பங்கு இருட்டிற்கும் உள்ளது. இந்த உரையின் சில முக்கியமான பகுதிகள் இருட்டில் வாசிக்கப்படுவதாகவே வடிவமைத்திருந்தேன். ஆகையினால், நாடகத்திற்காக எழுதப்பட்ட (lights off), (lights on) குறிப்புகளை கட்டுரையிலிருந்து நீக்கவேண்டாம் என்று உத்தேசித்திருக்கிறேன். வாசகர்கள் இந்தக் கட்டுரையின் உள்ளடக்கங்களை கற்பனையில் விரிக்கும்போது, அவை இருட்டில் இருக்கவேண்டுமா, வெளிச்சத்தில் இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து கற்பனை செய்தால், ஒரு கூட்டு கற்பனையாய் இந்த நாடகத்தை நம்மால் இணைந்து நிகழ்த்திக்கொள்ளவியலும் என்று நம்புகிறேன்.

(1)
#

(lights off)

நீங்கள் என்றைக்காவது நிரந்தரத்தை கற்பனை செய்து பார்க்க விழைந்திருக்கிறீர்களா? முடிவிலாது இங்கே திகழும் ஏதோ ஒன்றின் இருப்பு உங்களுக்கு எவ்வாறு காட்சியளித்தது? எனக்கது ஏனோ இருட்டாகத்தான் தெரிந்தது.

Have you ever strived to imagine eternity? How did the image of a ceaseless, boundless entity appear to you? For me somehow, it has always appeared to be darkness.

(lights on)

(2)
#

(lights on)

இந்த உலகிலே வாழும் எண்ணற்ற உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும்தான் நிரந்தரம் என்ற கருத்தே இருக்கிறது. தன் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் விரியும் வாழ்க்கைக் களத்தைத் தாண்டி, ஏதோ ஒன்றைப் பற்றி சிந்திக்கும் வல்லமை இங்கு மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது. மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் வானம் பார்ப்பதில்லை. வானத்தில் பறக்கும் பறவைக்கூட கீழே இருக்கும் இந்த பூமியைப் பார்த்தபடிதான் பறக்கின்றன. மனிதக் கண்களுக்குத்தான் வானத்து விண்மீன்கள் தெரிகின்றன. அலகிலாத மாற்றங்களின் கோர்வையாய் திகழும் இந்த உலகில், மாறாத, மாளாத ஒன்றை அவன் மட்டுமே நாடுகிறான். தன்னைச் சுற்றியும் சதா மாறிக்கொண்டே இருக்கும் உலகத்தின் பல்வேறு அங்கங்களை பார்த்துப் புரிந்துகொள்ளும் அவன், வெகு சீக்கிரத்திலேயே இங்கே மாறாமல் திகழும் ஒன்றை நோக்கி பயணப்படத் துவங்குகிறான். நிரந்தரம் என்ற கற்பனையைச் சென்றடைகிறான்.

நிரந்தரத்தின் பேரில் மனிதனுக்கு எப்பொழுதுமே ஒரு நாட்டம் உண்டு. இந்த உலகத்தில் அவன் வாழத்துவங்கிய காலந்தொட்டு அதை ஒரு மாபெரும் கனவு போல, நம் சார்பிலும், இனி வரப்போகும் எத்தனையோ தலைமுறைகளின் சார்பிலும் ஏற்கனவே கண்டுவைத்திருக்கிறான். அந்தக் கனவை பெருக்கி அங்கே ஒரு மாபெரும் உலகத்தையே படைத்திருக்கிறான். கடவுள், கலை, அறம், அன்பு, கருணை, காதல் என்று இந்த உலகிற்கும் அந்த உலகிற்கும் எத்தனையோ பாலங்களை அமைத்திருக்கிறான். அந்தப் பாலங்கள் வழியாக இரு உலகிற்கும் இடையில் எண்ணற்ற பரிமாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறான். அந்த உலகத்தின் சாட்சியாக, இந்த உலகத்தில் ஏராளமானவற்றைப் படைத்திருக்கிறான். இந்த உலகத்தில் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் சில உயர்ந்த தருணங்களின் நினைவாக அந்த உலகத்தில் எண்ணற்றவற்றை உருவாக்கி வைக்கிறான். இந்த இரு உலகத்தில் தான் செய்துவைத்த படைப்புகளை ஒன்றோடு ஒன்று கலக்கச் செய்து, தன் கனவுலகை இந்த உலகத்தோடு ஒன்றாக்குகிறான். ஒரு மாபெரும் கனவுக்காக தன்னை நேர்ந்துவிட்டவனைப் போல் இங்கே வாழ்க்கை நடத்துகிறான்.

(lights off)

(lights on)

அப்படி ஒரு பெருங்கனவுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு இங்கே வாழ்ந்த மனிதர்களும் ஒரு கட்டத்தில் அந்தக் கனவோடு கலந்துவிடுவதும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்களும் ஒரு கனவாகி, நிரந்தரம் என்ற கனவுலகத்தில், தங்கள் காலம் தாண்டி ஜீவிப்பதும் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரலாறு பெரும்பாலும் இத்தகைய ஜீவன்களின் கதைகளைத்தான் நமக்குச் சொல்கிறது. புத்தனும், ஏசுவும், அசோகனும், நம் உலகங்களில் இன்றும் நம்மோடு இருப்பது இப்படித்தான். மனித குலத்தைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் சிறந்த மனிதர்கள் பட்டியலில் மட்டும் இடம்பிடிக்கவில்லை. மனிதன் காலகாலமாய் கண்டுவைத்த நிரந்தரம் என்ற மாபெரும் கனவுலகிலும் இடம் பிடித்தவர்கள். ஒருவகையில் அவர்கள் நிரந்தரவாசிகள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அவர்களை ஒரு நிரந்தரத்திற்கு அண்மையில் கொண்டுசேர்த்திருக்கிறது. அங்கே அவர்கள் சென்ற பிறகு, அவர்கள் காலம் வென்றவர்களாய், காலம் அற்றவர்களாய் என்றும் இருந்துகொண்டே இருப்பதும் இப்படித்தான்.

(lights off)

(lights on)

இப்படிப்பட்ட மனிதர்களின் கதையை மனிதகுலம் நினைவில் வைத்துக்கொள்ளும்படி, அவற்றின் சாட்சியாய் சில குறியீடுகளை ஏற்படுத்துவதும் இங்கே ஆதிமனிதன் காலந்தொட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதன் காட்டில் வேடனாய் அலைந்த காலம் முதல், இறந்த தங்கள் தலைவனுக்கோ தலைவிக்கோ “menhirs” என்று அழைக்கப்படும் மாபெரும் நடுகல்லை நாட்டும் மரபில் துவங்கி, எகிப்திய பிரமிட்களும், பள்ளிப்படைகளும், சமாதிகளும், எல்லாம், இந்த உலகில் வாழ்ந்து மடிந்த ஒரு சிறந்த மனிதனை, நிரந்தரம் என்ற கனவுலகில் கொண்டு சேர்க்கும் சாதனங்கள். அவை ஒவ்வொன்றும் - “எங்கள் மண்ணில் என்றோ ஒருநாள் எங்களோடு ஒரு நிரந்தரவாசி வாழ்ந்தான்” என்பதைத்தான் நமக்குச் சொல்கின்றன. மனிதன் தனக்கு பெயர்வைத்துக்கொள்ள மொழியைக் கண்டடையாத காலத்திலிருந்தே, அவனோடு வாழ்ந்த சில சிறந்த மனிதர்களுக்காக குறியீடுகளைச் செய்யத் துவங்கிவிட்டான். காட்டிலே வேட்டையாடும் கூட்டங்களை சிறப்பாய் வழிநடத்திய எத்தனையோ தலைவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது. அவர்களுக்கு பெயர் வைக்க அவர்களிடம் மொழி இல்லை, உரு கொடுக்க அவர்களிடம் கலை இல்லை. ஆனால், அவர்கள் இருந்தார்கள் என்று நமக்குத் தெரியும். அவர்களை நமக்கு நினைவுபடுத்தியபடி, வானத்தையும் காலத்தையும் கிழித்துக்கொண்டு நிற்கும் நடுகற்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.

வரலாற்றிலே இடம் பெற்றான் என்று சிலர் சொல்வார்கள். நிரந்தரத்தில் இடம் பெற்றான் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால், வரலாறும் ஒரு நிரந்தரவாசிதானே, காலங்களைக் கிழித்துக்கொண்டு சில கதைகளை எடுத்துரைக்கும் ஒரு கருவி.

(lights off)

வரலாறோ, நிரந்தரமோ ஞாபகம் வைத்துக்கொண்ட மனிதர்கள் சிலர் என்றால், அது மறந்துபோன மனிதர்கள் ஏராளம். அத்தனை பேருக்கு நிரந்தரத்தில் இடம் இல்லை. ஏனென்றால் நிரந்தரத்தில் அனாவசியங்களுக்கு இடம் இல்லை. நிரந்தர உலகம் சொர்க்க நரகம் போன்றதல்ல. அதன் உள்ளே புக கடவுளுடைய தீர்ப்பு இருந்தால் போதாது, மனிதனுடைய தீர்ப்பு இருக்க வேண்டும். கடவுளர்க்கு இருப்பதாகச் சொல்லப்படும் கருணை மனிதனுக்குக் கிடையாது. நிரந்தர உலகத்தில் எவருடைய சிபாரிசும் செல்லாது. மனிதனுடைய கருணையற்ற பரிசீலனையைத் தாண்டியும் ஒருவன் சிறந்தவனாக திகழ்வானெனில், அவனுக்கே அந்த உலகத்தில் இடமுண்டு. நாலு பேருக்கு சோற்றுப் பொட்டலம் தந்துவிட்டு, தனக்கே சிலைவைத்துக் கொள்பவர்களையெல்லாம் வரலாறு நினைவில் வைத்துக்கொண்டிருப்பதில்லை.

(lights on)

நானும் சில நேரங்களில் எண்ணிப் பார்ப்பதுண்டு, புத்தனுடைய காலத்தில் வேறு சிறந்தவரே இல்லையா, என்ன? அவரோடு இருந்ததால் சிறப்படைந்த சிலரைத் தவிர அவர் காலத்தில் வாழ்ந்த வேறு எவரையும் நமக்குத் தெரியவருவதே இல்லையே. சிறந்தவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கலாம். ஆனால், கருணையற்ற மனிதனின் நீதிதராசில் உட்காரவைத்த பிறகும், தன் பக்கம் முள் சாய்ந்தது புத்தனுக்கு மட்டும்தான் இருந்திருக்கும். ஏனெனில், அவனோடு தராசில் வைக்கப்படுவது, காலகாலமாய் மனித குலத்தில் சேர்ந்த அழுக்குகளும், கழிவுகளும்தான். அமுக்கும் அதன் எடையையும் மீறி ஒருவன் முள்ளைத் தன் பக்கம் சாய்த்துவிட்டால், அவன் மட்டுமே நிரந்தரம் என்ற கனவுலகினுள் புகுகிறான். அப்படிப்பட்ட மனிதர்கள் வரலாற்றில் சிலர்தான், காலவெள்ள ஓட்டத்தில் எதிர் நீச்சல் அடித்துக்கொண்டு கரையொதுங்கும் சிலர்.

(3)
#

(lights off)

அப்படிப்பட்ட மனிதர் ஒருவரை மீண்டும் நிரந்தரம் என்ற கனவுலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்ட குறியீடுதான் இந்த கட்டுரையும். ஒரு நடுகல் போல, ஒரு பிரமிட் போல, ஒரு மனிதருடைய கதையை நிரந்தரத்தில் கலையாக்கிப் பதிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதுதான் இதுவும். அளவுகோல்கள் வேறாக இருக்கலாம். ஆனால், நோக்கத்தைப் பொறுத்தவரை இவை எல்லாமே ஒன்றுபட்டுதான் இருக்கின்றன. ஒரு மனிதனுடைய வாழ்க்கையை, அதன் சிறப்பை நிரந்தரத்தில் கலக்கச் செய்யும் ஒரு முயற்சி.

இந்தக் கல்லூரி (MSSW, Egmore) வளாகத்தில் அங்கங்கே சுவற்றில் புகைப்படங்களாய், பீடங்களில் சிலைகளாய் இருக்கும் ஒரு மனிதனுடைய கதை இது. Mary Clubwala Jadhav, இந்தக் கல்லூரியை நிறுவிய மனிதர், இந்தியாவிலேயே பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண், என்ற மூன்று விருதுகளையும் வாங்கிய ஒரே பெண்மணி, Madras மாநகரத்தின் முதல் Lady Sherif. இந்தக் கல்லூரியில் படிப்பவர்களும், வேலை செய்பவர்களும் பார்த்து பழக்கப்பட்ட முகம் என்பதைத் தாண்டி, இவரை இன்று தெரிந்து வைத்திருக்கும் நபர்கள் வெகு சிலர்தான். சென்னை மாநகரவாசிகளுக்கு, இந்த நகரத்தின் நீண்ட கதாநாயகர்களின் பட்டியலில் இவர் பெயரும் ஒன்று என்பதைத் தாண்டி பெரிதாய் வேறெதுவும் தெரிந்திருப்பதில்லை. பிழைத்த்துக் கிடைக்கும் சில பெரியவர்கள் தங்கள் சிறுவயதில் இவரைப் பார்த்த ஞாபகங்களை வேடிக்கையாய் பகிர்வதைத் தாண்டி, வேறு யாருக்கும் இவரோடு பெரிய தொடர்பில்லை.

ஆனால், நிரந்தர உலகம் இவரை ஞாபகம் வைத்துதான் இருக்கிறது. July 10, 1905ஆம் ஆண்டு, ஊட்டியில் ஒரு பார்சி தொழில் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் உதகையில். 18 வயதில் Nogi Clubwala என்பவரைத் திருமணம் செய்துகொள்கிறார். ஒரு மகனும் பிறக்கிறான். ஆனால், மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்து விடுகிறார். சிறு வயதிலேயே விதவையாகிப்போன அவர் பெருந் துயரில் ஆழ்கிறார். ஆனால், அதிலேயே மூழ்கி, கழிவிரக்கத்தில் உழலாமல், சமூகத்திற்க்காக பணி செய்யத் துவங்குகிறார். Guild of Serviceல் சேர்ந்துகொள்கிறார். Madras மாநகரத்தில் அன்று வாழ்ந்த வசதியான வீட்டுப் பெண்களை சமூகப் பணிக்குள் கொண்டுவர ஒரு பெரிய கருவியாக இருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் Hospitality Committeeயில் வீட்டுப் பெண்களைக் கொண்டு ஒரு அணிவகுத்து செயலாற்றினார். இந்தச் செயல்பாட்டிற்காக பாராட்டும் பெற்றார். Balavihar, Seva Samajam போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகத்தையும், குழந்தைகள் காப்பகத்தையும் நிறுவினார். நகரத்தில் தெருக்களில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். மருத்துவமனையில், ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் கொண்டுவந்தார்.

Juvenile Courtல் Honorary Magistrateஆக பணி புரிந்தார். சிறைச் சாலைகளில் குற்றவாளிகளுடன் பணியாற்றினார். Leprosy, TB போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்காக மருத்துவ வசதிகளை ஏறுபடுத்தித் தரும் பணியில் ஈடுபட்டார். சமூகப் பணிக்கென்று தனி கல்லூரியைத் துவங்கினார். இந்தியாவில் சமூகப் பணியை ஒரு தனி துறையாக வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார். Jadhav, எனும் இராணுவத் தலைவரோடு மறுமணம் செய்துகொண்டார். தன் வாழ்நாளுக்குள்ளேயே இரண்டாவது கணவரும், மகனும் இறந்துவிடுகிறார்கள். மகன் இறந்தச் சோகம் அவரை பெரிதாய் பாதிக்கிறது. மகன் இறந்து ஓராண்டிலேயே, 1975ஆம் ஆண்டு அவரும் இறந்து விடுகிறார். சென்னை ராயபுரத்தில் உள்ள பார்சி அஞ்சுமன் வளாகத்தில் உள்ள இடுகாட்டில் அவர் கல்லறை அமைந்துள்ளது.

சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், இதுதான் அவர் கதை. ஆனால், இத்தனைச் செயல்பாடுகளுக்குப் பின்னாலும் ஒரு மனிதன் ஒளிந்திருக்கிறார். அந்த மனிதரை அவர் கதையைப் போல இப்படிச் சுருக்க இயலாது. பெருங்கருணையால் உந்தப்பட்டு, தன்னோடு வாழும் ஒரு பெரும் மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையை தன்னால் முடிந்த அளவு மேம்படுத்த முயற்சித்த ஒரு மனிதர். இந்த முயற்சியை பலபேர் எடுத்திருந்தாலும், இதில் அவருக்கிருந்த செயல் நேர்த்தி அவரை இன்னும் ஒருபடி உயர்த்திக் காட்டுகிறது. எந்தச் சின்ன செயல்திட்டம் வடிவமைத்தாலும், குறைந்தது 100 ஆண்டுகளுக்குச் சிந்திக்கும் விசாலமான பார்வை அவருக்கு இருந்தது. எந்தத் தனிமனிதரையும் நம்பி இயங்காதபடி ஒவ்வொரு செயல்திட்டத்தையும் தன்னளவில் சுயேச்சையாக இயங்கும் பாங்கில் அவற்றை வடிவமைப்பதும் இவருடைய பணி நேர்த்தியின் மற்றொரு சிறப்பு. ஆங்கிலத்தில் “Institutions Builder” என்று சொல்வார்களே, அது இவருக்கு மிகவும் பொருத்தமான அடைமொழிதான். 75ஆண்டுகள் கடந்து விளங்கும் MSSW கல்லூரியே அவர் செயல்பாடுகளின் வெற்றிக்கு ஒரு முதன்மை சான்று.

தனி வாழ்க்கை துயர் மிகுந்ததாகவே இருந்தாலும், பொது வாழ்க்கை தன்னையும் கடந்த விஷயங்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டதாகவே இருந்தது. அவர் வாழ்க்கையின் இந்த இடங்கள்தான் அவரை ஒரு நிரந்தரத்திற்கு அண்மையில் கொண்டு சேர்த்தது. தன்னையும் விடப் பெரிய விஷயங்களுக்காக ஒருவர் தன்னை அர்பணித்துக்கொள்ளும்போது, இயல்பாகவே அவர் வாழ்க்கைக்கு ஒரு ஏற்றம் வந்துவிடுகிறது. அந்த ஏற்றத்தை அவர் தொடரத் தொடர அவரையே அது உருமாற்றத் துவங்குகிறது. அவர் எதற்காக தன்னை அர்பணித்துக் கொண்டாரோ, அதுவாகவே அவர் மாறத் துவங்கிவிடுகிறார். அந்த மாற்றம் அவரை அவரிடமிருந்தே விடுவிக்கிறது. அந்த விடுதலை அவரை ஒரு நிரந்தரவாசியாக்குகிறது. காலம் அவரைத் தீண்டுவதில்லை. அவர் கல்லறை அவரை சுருக்குவதில்லை. ஆறடியில் மட்டும் படுத்துக்கிடக்கும் மனிதர் பட்டியலில் அவர் வருவதில்லை.

(lights off)

இங்கே இதற்குமேல் அவரைப் பற்றி தரவுகள் எதுவும் நாங்கள் கூறப்போவதில்லை. தகவல்களுக்கும் தரவுகளுக்கும் நாம் வாழும் காலத்தில் பஞ்சமே இல்லை. இந்த கட்டுரை ஒரு மனிதரின் வாழ்க்கையை ஒரு தகவல் தொடராக முன்வைத்து, அவரைக் கொண்டாடும் நோக்கத்தில் செய்யப்பட்டதல்ல. இதுபோன்ற மனிதர்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம் என்பதை முன்வைக்கும் ஒரு முயற்சி. எந்த அளவிற்கு இந்தக் கட்டுரை Mary Clubwala Jadhavவைப் பற்றியதோ, அதே அளவிற்கு இது நம்மைப் பற்றியும்தான். நாம் இது போன்ற மனிதர்களை எவ்வாறு கடந்து போகிறோம் என்பதைப் பற்றியும்தான்.

தனிப்பட்ட முறையில், Mary Clubwala Jadhav ஆகச்சிறந்த மனிதர் ஒன்றுமில்லை. இவர், மனிதர்கள் அனைவரும் எவ்வாறு வாழவேண்டும் என்று உதாரணமாய் இருந்து, ஒரு பெருங்கூட்டத்தையெல்லாம் வழிநடத்தவில்லை. மனிதர்களுக்கே உரித்தான எல்லாக் குறைகளும் இவருக்கும் இருந்தது. அவர் கொள்கைகளிலும், கருத்துக்களிலும் நமக்கு தனிப்பட்ட முறையில் பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் தனக்கென்று ஒரு குறிக்கோளை எடுத்துக்கொண்டு, அதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதை நேர்த்தியாகச் செய்வதன் மூலம் ஒரு மனிதர் அடையக்கூடிய சில சிறப்புகளே இவரை நமக்கு உயர்த்திக்காட்டுகிறது.

இவரைப் பற்றி உலகமே அறிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், இந்தியாவில் சமூகத்திற்காக உழைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர் வாழ்க்கையையும், செயல்பாடுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்தான். ஊர் மரத்தின் நிழலை உலகத்தவர் அறிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், ஊரார் அறிந்திருக்கத்தானே வேண்டும்.

இந்தியாவில், சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை, சமூகப் பணி போன்ற சொற்கள் காலப்போக்கில் எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ளப்பட்டன என்பதை நமக்குச் சொல்லும் எத்தனையோ சான்றுகளில் இவர் கதையும் ஒன்று. வசதியான குடும்பங்கள் அவ்வப்பொழுது செய்யும் தானங்களும், கொடைகளும்தான் சமூகப் பணி என்ற நிலை இந்தியாவில் இருந்தபோதுதான் இவர் Guild of Serviceல் இணைகிறார். ஆனால், அந்த நிலை மாறி, சமூகப் பணி என்ற அமைப்புமுறைக்கு உட்படுத்திய தனித்துறை இங்கே வளர இவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. இந்தியாவில் யார் சமூகப் பணி செய்தார்கள்? யாருக்காக சமூகப் பணி செய்யப்பட்டது? என்ற இரண்டையுமே மாற்றியமைக்க, புதிதாய் சுதந்திரம் அடைந்திருந்த இந்தியாவில் இவர் செய்த வேலைகள் கவனிக்கத்தக்கவை. சமூகத்தின் தேவைகளை முறையாய் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகளுக்கேற்ப செயல்திட்டங்களை வடிவமைத்து, அது மக்களுக்கு பயன் தந்ததா என்பதை முறையாய் சோதித்து புரிந்துகொள்ளத் தெரிந்தத் தேர்ச்சிபெற்ற நபர்கள் சமூகப் பணி செய்யும் நிலை இங்கே உருவானது.

இவரைப் போன்ற மனிதர்கள் நம் மண்ணில் எத்தனையோ பேர் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரைப் பற்றியும் நாம் தெரிந்துவைத்துக்கொள்ள முடியாது, அதற்கான அவசியமும் இல்லை. ஆனால், நாம் செயலாற்ற விழையும் துறையிலோ, நாம் வாழும் ஊரிலோ முன்னோடிகள் என்று திகழ்பவர்களையும், சிறந்தவர்கள் என்று இருப்பவர்களையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்தான். நாம் செய்ய விழையும் ஒன்றை நமக்கு முன்னால் இருந்தவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது நம் செயல்களுக்கு ஒரு நேர்த்தியை அளிக்கத்தான் செய்யும். நாம் வாழும் ஊரில் சிறந்தவர் என்று போற்றப்படும் ஒருவர் இந்த இடத்தோடு எவ்வாறான உறவைக் கொண்டிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளும்போதே நமக்கும் அதற்குமான தொடர்பு பன்மயப்பட்டு விரிகிறது. ஒரு சிறந்தவரின் பார்வையிலிருந்து நாம் வாழும் ஊர் எவ்வாறு தெரிகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும்போதே நம் வாழ்க்கையும் அங்கே அன்றாடங்களையும், பயன்பாடுகளையும் கடந்ததாகிறது. வெறுமனே வாழ்க்கையை வாழும்போதே நிரந்தரத்தை அவ்வப்பொழுது எட்டிப்பார்க்க முடிகிறது.

நாம் செய்ய விழையும் ஒரு செயலை மனிதன் இதற்கு முன்னால் எவ்வாறெல்லாம் செய்துவந்திருக்கிறான் என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது, நோக்கத்தின் அளவில் சம்பந்தப்பட்ட ஒரு மனிதக் கூட்டத்தோடு நாம் உரையாடத் துவங்குகிறோம். அந்தக் கூட்டம் காலங்களுக்கு அப்பால் இருக்கும் கூட்டம். அதனோடு நமக்கு ஒரு தொடர்பு அமையும்போது, நம் நோக்கங்களும் காலம் கடக்கிறது. காலத்திற்கு வெளியே நின்றுகொண்டு தற்காலத்தை நாம் புரிந்துகொள்ளும் பார்வை நமக்கு வாய்க்கிறது. அங்கிருந்து நோக்கும்போது காலத்திற்கு உள்ளே இருக்கும் அடைசல்கள் நம்மை திணறவைப்பதில்லை. காலத்தின் நெரிசல்கள் நம் செயல்பாடுகளைச் சுருக்குவதில்லை. இந்த நிலையில் நாம் செயலாற்றும்போது நிரந்தரத்தை நம்மாலும் இங்கே கொண்டுவர முடிகிறது. கனவை காலத்தில் நாட்ட முடிகிறது. இருண்ட வானத்திலிருந்து வறண்ட இந்த பூமிக்கு உயிர்கள் சேர்க்கும் மழைபோல நம்மால் வாழமுடிகிறது.

(lights on)

Mary Clubwalaவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
#

  1. University of Southampton Special Collection - Mary Clubwala Jadhav https://specialcollectionsuniversityofsouthampton.wordpress.com/2024/04/25/mary-clubwala-jadhav/
  2. Mary Clubwala and MSSW by TK Nair - https://www.nirutapublications.org/social-work-blog/mary-clubwala-jadhav-and-mssw
  3. Spreading Hope and Happiness - Guild of Service (Central) and Seva Samajam by Rukmini Amirapu
Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious