இத்தனை நேரமும் இந்த அறை இருட்டாகத்தான் இருந்தது.
ஒளியையே நாடும் எனக்கது ஏனோ தெரியவருவதே இல்லை.
இத்தனை காலமும் இந்த உலகில் காடுதான் இருந்தது.
வீட்டு மாடியில் செடி வளர்க்கும் எனக்கது ஏனோ தெரியவருவதே இல்லை.
இத்தனை நாட்களும் அவர் இங்கு தனியேதான் வாழ்ந்திருக்கிறார்.
உறவை வளர்க்கும் எனக்கது ஏனோ தெரியவருவதே இல்லை.
பிறக்கும்போது நான் என் நிர்வாணத்தால் போர்த்தப்பட்டிருந்தேன்.
துணிக்கடைகளில் அலையும் எனக்கது ஏனோ தெரியவருவதே இல்லை.
வானந்தான் இந்த பூமிக்கு நீர் தருகிறது.
குவளைகளைச் சீப்பும் எனக்கது ஏனோ தெரியவருவதே இல்லை.
இந்த மண்ணில் எத்தனையோபேர் வாழத்தான் செய்தார்கள்.
வாழ்க்கையைக் கட்டமைக்கத் திண்டாடும் எனக்கது ஏனோ தெரியவருவதே இல்லை.
ஒருவேளை நான் இல்லையென்றால் இது யாவும் எனக்கு முன்னமே தெரிந்திருக்குமோ?
நான் இல்லையேல் பிறக்கும் உண்மை எனக்கும் உண்மைதானா?
நான் இல்லாதபோதே கிடைக்கும் உண்மை எனக்குத் தேவைதானா?
காதிற்கு கேட்காத பாட்டின் சத்தம் எனக்கெதற்கு?
காதைத் தாண்டியும் கேட்பதுதான் பாட்டெனில் எனக்குக் காதெதற்கு?
ஒளியே இல்லையேல் எனக்கு இருட்டு நன்றாய் தெரிந்திருக்குமோ?
ஒளியை மட்டும் பார்க்கும் கண்ணிற்கு இருட்டெதற்கு?
இருட்டைக் காணத் துடிக்கும் எனக்கு கண்ணெதற்கு?
உண்மை நாடும் எனக்கு நான் எதற்கு?
— அயலவன்