கற்ற கல்வியெல்லாம் மறந்து போகிறது.
உற்ற அன்பெல்லாம் எரிச்சலூட்டுகிறது.
எவர் சிரிப்பும் பொய்யெனத் தெரிகிறது.
உலகமே ஓலக் குரலில் ஒலிக்கிறது.
வாழ்வின் இன்பங்கள் மனதின் இடுக்குகளில் போய் ஒளிகிறது.
நான் எனக்கும் என் துயரத்திற்குமான தூரம்.
கையில் கச்சிதமாய் நெளியும் புத்தகத்தின் மழலைகூட பதற்றமாக்குகிறது.
பரவசம் பற்ற மறுக்கிறது.
பூ பூப்பது வாடி உதிர.
கனி இனிப்பதும் மட்கி அழுக.
மனிதன் பிறப்பது செத்து மடிய.
காலம் ஓடுவதும் சாவில் போய் நிற்க.
காலனின் கடைநாதம் மூளை நரம்புகளில் துடிக்கிறது.
சுழலும் இயல்புடைய உலகம் சுழன்று காட்டுகிறது.
காட்சி வெளிர்கிறது.
ஈர்ப்புவிசை கொஞ்சம் கூடுகிறது.
நடக்க விழையும் மனமும் நகர மறந்த கால்களும் வெவ்வேறு வாழ்க்கையை வாழ்கின்றன.
பாதை இருப்பது பார்வைக்குக்கூட படுவதில்லை.
சொல்லிப்பார்க்க சொற்கள் இல்லை.
வீசிப்பார்க்க இசையும் இல்லை.
நேற்றைய ஞானமெல்லாம் நேற்றோடு முடிகிறது.
காணும் காட்சியெல்லாம் கண்ணோடு நிற்கிறது.
என் உடம்பிற்குள் நான் சிக்கிக்கொண்டு இருக்கிறேன்.
ஆம், எனக்கு பசிக்கிறது!
உண்கிறேன்!
அரை வயிற்றுக்கு மேல்தான் நான் ஞானி…
-அயலவன்